திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரமோற்சவ விழாவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவ விழாவில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-03-08 22:15 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 6-ந்தேதி நடைபெற்றது. மாசி பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் வெகு விமரி்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில், உற்சவர் கல்யாணசுந்தரர் உடன் பார்வதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அப்போது, கூடியிருந்த பக்தர்கள் இனிப்புகள் பரிமாறியும், கைத்தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி, திருவொற்றியூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு வரலட்சுமி, கோவில் உதவி ஆணையர் சித்ரா தேவி, தொண்டன் சுப்பிரமணி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் தி.மு. தனியரசு தலைமையில் தி.மு.க.வினரும், தே.மு.தி.க. தலைமை பொது குழு உறுப்பினர் உத்தண்டராமன் தலைமையில் தே.மு.தி.க.வினரும் அன்னதானம் வழங்கினர். ஆங்காங்கே உபயதாரர்கள் நீர் மோர், பழச்சாறும் வழங்கினர்.

இதைதொடர்ந்து மாலையில் 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும், இரவில் கல்யாண சுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சிதரும் மகிழடி சேவையும் நடைபெற்றது. நாளை(செவ்வாய்க்கிழமை) திருநடனம் மற்றும் பந்தம்பறி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.

மேலும் செய்திகள்