கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரி ராயப்பா நகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2020-03-09 23:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 243 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாலிங்கம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொற்று நோய் பரவுகிறது

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முடிந்த பிறகு வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜனிடம் கொடுத்த மனுவில், வி.களத்தூரில் உள்ள சில பகுதிகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.

மேலும் அருகே உள்ள கல்லாற்றிலும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. 40 ஆண்டுகாலமாக தொடரும் இந்த கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்