பெருந்துறை அருகே பரபரப்பு: காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல், பெற்றோருக்கு போலீஸ் வலைவீச்சு

பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தியதாக அவருடைய பெற்றோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-03-10 22:30 GMT
பெருந்துறை, 

பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மகள் மவுனிகா (வயது 24). துடுப்பதி காவிலிபாளையத்ைத சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (25), துடுப்பதியில் செயல்பட்டு வரும் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தபோது மவுனிகாவுக்கும், நவநீதகிருஷ்ணனுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது. இதனால் கடந்த மாதம் 13-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ேஜாடி திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு மறுநாள் 14-ந் தேதி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.

இதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பெண்ணின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காதல் ஜோடி திருப்பூர் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மவுனிகாவின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உன்னுடைய தந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. அவரை பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளோம். உனக்கு தந்தையை பார்க்க விருப்பம் என்றால் வா' என்று கூறினார்கள்.

உறவினரின் பேச்சை நம்பிய மவுனிகா பெருந்துறையில் உள்ள ஒரு குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு தன்னுடைய காதல் கணவருடன் சென்றார். அப்போது மருத்துவமனையில் வாசலிலேயே ரகுபதி நின்றிருந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ரகுபதி, தாய் ராேஜஸ்வரி, சித்தப்பா பிரகாஷ் ஆகியோர் மவுனிகாவை அடித்து உதைத்து அங்கு தயாராக நின்றிருந்த காரில் ஏற்றினார்கள். நவீநீதகிருஷ்ணன் இதை தடுக்க முயன்றார். அதனால் அவருக்கும் தர்ம அடி விழுந்தது. பின்னர் மின்னல் வேகத்தில் காரில் மவுனிகாவை கடத்தி சென்றுவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதில், என்னுடைய மனைவியை அவருடைய தந்தை, தாய், சித்தப்பா 3 பேரும் அடித்து கடத்தி சென்றுவிட்டார்கள். எனவே மவுனிகாவை மீட்டு அவரை கடத்தியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மவுனிகாவையும், கடத்திய ரகுபதி, ராஜேஸ்வரி, பிரகாஷ் ஆகியோரையும் வலைவீசி தேடி வருகிறார்.

நாடோடிகள்-2 சினிமா படத்தில் வருவதுபோல் நடந்த இந்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்