பாம்பனில் ரூ.68 கோடியில் கட்டப்பட்டு வரும் துறைமுகம் - 2 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

பாம்பனில் ரூ.68 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்னும் 2 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்தார்.

Update: 2020-03-12 22:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையின் கெடு பிடியால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன. ஆழ்கடல் மீன் பிடிப்புத் திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் குந்துகால் கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தின்படி, ஆழ்கடல் மீன்பிடி படகுகள் நிறுத்த வசதியாக துறைமுகம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதற்காக கடலுக்குள் 150 மீட்டர் நீளத்தில் 4 இடங்களில் பாலம் அமைத்து, துறைமுகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதன்படி சாலை அமைக்க புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து லாரிகள் மூலம் செம்மண் கொண்டு வந்து பணிகள் நடக்கின்றன.

இதுகுறித்து மீன் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- குந்துகால் கடற்கரையில் ரூ.68 கோடியில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் கட்டும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளன. இறுதி கட்டமாக துறைமுக பகுதியில் சுமார் 600 மீட்டரில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த துறைமுகத்தில் சுமார் 300-க்கும் அதிகமான மீன்பிடி படகுகளை நிறுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் இதுவரை 65 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் 22 படகுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அந்த படகுகளும் கொச்சின் மற்றும் நாகப்பட்டினம் துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்று வருகின்றன. குந்துகால் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிந்ததும் அனைத்து படகுகளும் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்