முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.;

Update:2025-12-23 12:25 IST

சென்னை,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி நகர்வுகள், விருப்ப மனுக்கள் அளித்தல், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கிவிட்டன. இதனால் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

ஆளும் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க., 2 கம்யூனிஸ்டுகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் காங்கிரஸ் புதிய வரவான த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் இதனை அக்கட்சியினர் மறுத்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் குழு கட்சி மேலிடத்தால் அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது. இது காங்கிரஸ் - த.வெ.க. கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் இருந்தது.

இதற்கிடையில், தேர்தலின்போது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சந்தித்து பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணி, அரசியல் நிலவரம், கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆட்சியில் பங்கு குறித்து கிரிஷ் சோடங்கர் பேசியது குறித்தும் விவாதித்தாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்