ஆறுமுகநேரியில் பஸ் டிரைவர் வி‌ஷம் குடித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி, நண்பர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 43).

Update: 2020-03-13 21:30 GMT
ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் பஸ் டிரைவர் வி‌ஷம் குடித்து இறந்தது தொடர்பாக, தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய மனைவி, நண்பர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பஸ் டிரைவர் தற்கொலை 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 43). இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகேஷ் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த மகேஷ் கடந்த 7–ந்தேதி இரவில் ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் நிலையம் முற்றுகை 

இதற்கிடையே, மகேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது சாவுக்கு தன்னுடைய மனைவி அருணாவும், நண்பர் ரதனும்தான் காரணம் என்றும், தன்னுடைய 2 மகன்களையும் மனைவியிடம் ஒப்படைக்காமல், தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி செல்போனில் பதிவு செய்து, அதனை ‘வாட்ஸ்–அப்‘ மூலம் நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மகேஷின் தற்கொலைக்கு காரணமான மனைவி அருணா, நண்பர் ரதன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மனைவி, நண்பர் மீது வழக்கு 

இந்த நிலையில், மகேஷை தற்கொலைக்கு தூண்டியதாக அருணா, ரதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்