144 தடை உத்தரவு: தூத்துக்குடி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர்

144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.

Update: 2020-03-24 22:30 GMT
தூத்துக்குடி, 

144 தடை உத்தரவு காரணமாக தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.

144 தடை உத்தரவு 

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காலையில் இருந்து மாலை வரை அனைத்து கடைகள், பஸ், ஆட்டோக்கள் இயங்கின. தூத்துக்குடியில் பொதுமக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மார்க்கெட், மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் குவிந்தனர்.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அப்போது மார்க்கெட் நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பொதுமக்கள் முக கவசம் அணிந்து பொருட்கள் வாங்க வர வேண்டும். பொருட்கள் வாங்கிய உடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் மதியம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் காலை முதல் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

ஏ.டி.எம். மையம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தேவைக்காக பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களில் குவிந்தனர். நகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து சென்றனர். வங்கியில் பணம் எடுக்கவும் மக்கள் குவிந்தனர். இதனால் 5 பேராக வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்றும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள்.

அதே போல் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. இந்த தடை உத்தரவால் நேற்று மாலையில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனையடுத்து நகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் மருந்து கடைகள், பெட்ரோல் பல்க் போன்றவைகள் மட்டும் திறந்து இருந்தன. அத்தியாவசிய மருந்து பொருட்களை வாங்கவும், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பவும் பொதுமக்கள் மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் பல்க்குகளில் குவிந்தனர். அவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்