நாகர்கோவில் பஸ் நிலையங்களுக்கு வந்த பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை

நாகர்கோவில் பஸ் நிலையங்களுக்கு வந்த பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-03-24 22:30 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் பஸ் நிலையங்களுக்கு வந்த பயணிகளுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31–ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வரும் குமரி மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று கருதி நேற்று முன்தினம் முதலே ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் மூலம் நாகர்கோவில் வந்து சேர்ந்தனர்.

இதையொட்டி நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்திறங்கிய பயணிகள் மற்றும் அங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றவர்களுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையை கணக்கிட்டனர். ஆனால் யாருக்கும் காய்ச்சல் எதுவும் இல்லாததால் பயணிகள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தெர்மல் ஸ்கேனர் சோதனையின் போது பயணிகள் அனைவரும் 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு 

இதேபோல் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்கள் மூலமாக ஏராளமான பயணிகள் வந்திறங்கினர். அங்கு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில், நகர்நல அதிகாரி கின்சால் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆம்னி பஸ்களில் இருந்து வந்திறங்கிய பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை கணக்கிட்டனர்.

இதிலும் யாருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை. இதையடுத்து அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நாகர்கோவில் வந்து சேர்ந்த ஆம்னி பஸ்கள் அனைத்திலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் அனைத்திலும் பயணம் செய்து வந்திறங்கிய பயணிகள் பெரும்பாலும் முக கவசம் அணிந்து வந்தனர்.

மேலும் செய்திகள்