வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது ஆணையர் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என கூத்தாநல்லூர் ஆணையர் லதா எச்சரித்தார்.

Update: 2020-03-25 00:00 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த பணிகளை நகராட்சி ஆணையர் லதா ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டார். தொடர்ந்து கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

பின்னர் அரசு மருத்துவமனை, பெட்ரோல் விற்பனை நிலையம், மருந்தகங்கள், சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள், கடைகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது மருந்தகங்களில் முக கவசம், கை கவசம், கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்க கூடாது என்று கூறினார். அப்போது சுகாதார ஆய்வாளர் அருண்குமார், மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

சுகாதார பணிகள்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் லதா கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நகரில் உள்ள 24 வார்டுகளிலும், கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளிலும் தீவிரமாக சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கடந்த 1-ந் தேதி முதல் ஊருக்குள் வந்தவர்கள் மற்றும் அவர்களது வீட்டில் உள்ளவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். அவ்வாறு வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடந்த 1-ந் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து ஊருக்குள் வந்தவர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வந்தவர்கள் தாமாகவே முன்வந்து நகராட்சி அலுவலகத்திற்கு உரிய தகவல் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்