144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; தண்டோரா மூலம் வேண்டுகோள்

வத்திராயிருப்பு பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்ததோடு தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தர தண்டோரா மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Update: 2020-03-24 21:30 GMT
வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், சா.கொடிக்குளம் ஆகிய 4 பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்தது.

செயல் அலுவலர்கள் கண்ணன், சிவ அருணாசலம், மோகன் கென்னடி, சந்திரகலா ஆகியோர் முன்னிலையில் கோவில், பஸ் நிலையம், மசூதி, தேவாலயம், ஏ.டி.எம். மையங்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்ததோடு பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம், வங்கி ஆகிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

144 தடை உத்தரவினை கடைபிடிக்க வேண்டும் என்றும் காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று தங்களை பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளிலும் தண்டோரா மூலம் தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்துமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்