தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 144 தடை உத்தரவையொட்டி கடைகள் மூடப்பட்டன போக்குவரத்து நிறுத்தம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 144 தடை உத்தரவையொட்டி கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2020-03-24 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் மாலை 6 மணி அளவில் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டன.

அதே போல பஸ்களும் சுமார் ஒரு மணி நேரம் முன்னதாகவே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக கிருஷ்ணகிரி புதிய, பழைய பஸ் நிலையம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆட்டோக்கள், கார்கள் என எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.

காய்கறிகள் விற்பனை

முன்னதாக நேற்று காலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கிருஷ்ணகிரி உழவர் சந்தைக்கு வழக்கமாக 2 ஆயிரம் பேர் வருவது வழக்கம். 17 டன் காய்கறிகள் விற்பனை ஆகும். நேற்று 6 ஆயிரம் பேர் சந்தைக்கு வந்தனர். மேலும் 23 டன் காய்கறிகள் விற்பனை ஆனது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் ஆகும்.

இதேபோல் ஓசூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் டாஸ்மாக் கடைகளும் நேற்று முதல் பூட்டப்பட்டதை அடுத்து அங்கும் விற்பனை களை கட்டியது.

தர்மபுரி

இதேபோல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததை அடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் மாலை 6 மணியளவில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்ட எல்லையில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து லாரிகள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வராமல் திருப்பி அனுப்பினர். வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

மேலும் செய்திகள்