செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதி

செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமையில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-03-24 22:15 GMT
செய்யாறு, 

செய்யாறு அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 3 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

செய்யாறு டவுன் கொடநகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி, அவரது சகோதரி ஆகியோர் பெங்களூருவில் வசித்து வந்தனர் இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநகரில் உள்ள தாயார் வீட்டிற்கு திரும்பினர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும், தயாருக்கும் தொடர்ந்து இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என்ற அச்சத்தில் 3 பேரும் செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 3 பேரையும் டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துசிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து 3 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா? என்பது தெரியவரும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த நிலையில் மற்ற நோயாளிகளின் அச்சத்தை போக்கிட 3 பேரையும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்