கொரோனா வைரஸ் தடுப்பு எதிரொலியாக புழல் ஜெயில் கைதிகள் 156 பேர் ஜாமீனில் விடுதலை - அரசு திடீர் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் 156 பேரை ஜாமீனில் விடுதலை செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

Update: 2020-03-24 23:53 GMT
செங்குன்றம், 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள புழல் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதியாக ஜெயிலில் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மகளிர் ஜெயிலில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு எதிரொலியாக ஜெயிலில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கைதிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்பொருட்டு, சிறுசிறு வழக்குகளில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் மூலம் ஜாமீன் வழங்கி நேற்று விசாரணை கைதிகளில் ஆண்கள் 226 பேரையும், பெண் கைதிகள் 36 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய நீதிமன்றங்களில் சிறப்பு ஜாமீன் வழங்கப்பட்டு நேற்று பகல் முதல் இரவு 8 மணி வரை 150 ஆண் கைதிகளும், 6 பெண் கைதிகளும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜெயிலில் இருந்து வெளியில் வந்த கைதிகளை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஜெயில் வாசலில் கூடியிருந்தனர். 

இதைத்தொடர்ந்து, 2 பேர் முதல் 5 பேர் வரை படிப்படியாக விடுவிக்கப்பட்டு வெளியில் வந்த கைதிகளை அவரது உறவினர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை தமிழக அரசு விடுதலையை மேற்கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து மீதமுள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்