கொரோனா அச்சுறுத்தலால் மாவட்ட எல்லைகள் மூடல்: 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. 144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2020-03-24 22:00 GMT
தேனி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாகவும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நேற்று மாலை 6 மணியளவில் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அதன்படி தேனியில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தேனி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 144 தடை சட்டத்தின்படி, பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக சேரக்கூடாது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளான பஸ், ஆட்டோக்கள், டாக்சி போன்ற போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் காய்கறி கடை, மளிகை கடைகள், மருந்தகங்கள், பால் மற்றும் ரேஷன் கடைகள் செயல்படும். உணவகங்களில் அமர்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. பார்சல் முறையில் உணவுகள் வழங்கலாம். அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசியமான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதி உண்டு.

தேனி மாவட்டத்தில் இந்த தடைச்சட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது 1897-ம் ஆண்டு தொற்று நோய் சட்டம், 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 மற்றும் 45 ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்