குடியாத்தம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடியாத்தம் மருத்துவமனை மற்றும் சோதனை சாவடியில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார்.

Update: 2020-03-28 23:00 GMT
குடியாத்தம், 

தொடர்ந்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரதராமி சோதனை சாவடி மற்றும் குடியாத்தம் அரசு மருத்துதுவமனையில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினரிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பற்றியும், தடை உத்தரவு அமல்படுத்தப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து குடியாத்தம் தாசில்தார் வத்சலா, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், டி.சி.எம்.எஸ் தலைவர் ஜெ.கே.ன் பழனி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோருடன் குடியாத்தத்தில் செயல்படுத்தப்படும் 144 தடை உத்தரவு, அதற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரசுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் 144 தடை உத்தரவை செயல்படுத்த பொது மக்களும், இளைஞர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையில்லாமல் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றுவதால் பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றார்.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் 144 தடை உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 5 ஊராட்சிக்கு ஒரு ஆட்டோ வீதம் 10 ஆட்டோக்கள் மூலம் இந்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சசீந்தரன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்