கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? நெல்லையில் 19 ஆயிரம் வீடுகளில் மருத்துவ குழுவினர் அதிரடி ஆய்வு

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்று நெல்லையில் ஒரே நாளில் 19 ஆயிரம் வீடுகளில் மருத்துவ குழுவினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

Update: 2020-03-29 23:00 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் தங்கி இருந்த இடத்தை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் ‘கண்டைன்மென்ட்‘ ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இதற்காக 72 மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் 369 களப்பணியாளர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டனர். மேலும் 130 மருத்துவ மாணவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பணியை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நேற்று ஒரே நாளில் சுமார் 19 ஆயிரம் வீடுகளில் இந்த அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த குழுவினர் ஒவ்வொருவரும் குறைந்தது 50 வீடுகளை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும், அந்த வீட்டில் வயதானவர்கள், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு தொந்தரவு உள்ளவர்கள் விவரங்களை சேகரித்தனர். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அந்த வீட்டை பற்றிய தகவலை உடனடியாக மருத்துவ அலுவலரிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அந்த வீட்டுக்கு மருத்துவ அலுவலர்கள் சென்று முககவசம் வழங்கி, தேவையான அறிவுரைகளும் வழங்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த நபர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்