கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: தேசிய பேரிடர் மீட்பு படை நெல்லை வந்தது - ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் 6 பேர் கொண்ட குழு அனுப்பி வைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தனர். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் 6 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-03-30 22:30 GMT
நெல்லை, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக இருந்தாலும் சிலர் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று முன்தினம் இரவு நெல்லை வந்தனர். 

இந்த படையினர் சென்னை பூந்தமல்லியில் இருந்து வந்து உள்ளனர். இந்த படையில் 70 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் நேற்றும் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 150 பேர் வந்து உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் 6 பேர் கொண்ட குழுவாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அவர்களை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அழைத்து சென்று, கண்காணிப்பார்கள். 

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார்கள். இந்த குழுவினர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி வரை நெல்லையில் தங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்