கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2020-03-30 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித்சிங் கலோன், விஜயா, தனப்பிரியா, மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பரிதாஷெரின், துணை இயக்குனர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து 4,677 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து உள்ளோம். இதேபோன்று வெளிநாட்டில் இருந்து வந்த 2,007 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இது நாட்டுக்கு செய்யும் தியாகம். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் கொண்டு சென்று வழங்க உள்ளோம்.

மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளிலும் கிருமிநாசினி தினமும் தெளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் நாட்டுக்கு ஒரு பேரிடர். ஆகையால் மக்களிடம் அரசு வைக்கும் ஒரே கோரிக்கை ஒத்துழைப்புதான். கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும், அதனை துடைக்கும் பணிகளை அரசு செய்து வருகிறது.

இந்த பணி, பாராட்டை எதிர்பார்த்து செய்யும் நடவடிக்கைகள் அல்ல. ப.சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகள் விமர்சனங்களை முன்வைக்காமல், ஆலோசனை சொல்வது சரியாக இருக்கும். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாளர்களை தமிழக அரசு பணி செய்ய வைத்து உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொதுவாக கருத்துகளை சொல்வது சரியாக இருக்காது. குறிப்பிட்ட இடத்தை கூறினால், அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்