ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்

ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2020-03-30 22:30 GMT
மாமல்லபுரம், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரம், ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காட்சி அளித்து வருகிறது.

ஊரடங்கின் 6-வது நாளான நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்ன மையங்கள் 6-வது நாளாக வெறிச்சோடி கிடக்கிறது.

மாமல்லபுரம் கடற்கரையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, கடல் அலையின் ஓசை மட்டும் கேட்கிறது. மக் கள் நடமாட்டம் இல்லாததால் மயானம் போல் அந்த பகுதி அமைதியாக காட்சி அளித்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் நகரப்பகுதியில் காய்கறி கடை, மளிகை கடை, மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணி முதல் 8 மணி வரை தங்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.

அதன்பிறகு சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாமலும், அங்குள்ள புராதன சிற்பங்கள் மட்டுமே காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. மாமல்லபுரம் ஊரே அமைதியாக காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்