ஊரடங்கு உத்தரவு எதிரொலி: வருமானமின்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்கள்: உதவித்தொகையை அதிகரிக்க கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருவதாகவும், உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-04-25 22:45 GMT
நாமக்கல், 

கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதையொட்டி விசைத்தறி, கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அந்தந்த தொழில்களை சார்ந்த தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

இத்தகைய தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பெரும்பாலும், அன்றாட கூலியை வைத்தே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது அரசு சார்பில் ஊரடங்கையொட்டி உதவித்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அது அத்தியாவசிய தேவைகளுக்கே போதுமானதாக இல்லை என கட்டுமான தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இந்திய தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவால் நாமக்கல் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் கட்டுமான பணிகள் பாதியில் நிற்கின்றன. கட்டுமான தொழிலாளர்கள் அன்றாட கூலியை வைத்துதான் குடும்பம் நடத்தி வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகையானது, சங்கத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி உதவித்தொகை ரூ.ஆயிரமும், ரேசன் அட்டைத்தாரருக்கு ரூ.ஆயிரமும் என ரூ.2 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. சராசரியாக ஒரு நாளைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் ரூ.200 செலவாகிறது. அதனால் ஒரு குடும்பத்திற்கு மாதம் குறைந்தது ரூ.6 ஆயிரம் வரை செலவாகும்.

இத்தகைய சூழலில் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவே போதுமானதாக இல்லை. எனவே தமிழக அரசு தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து வழங்குவதோடு, ரேசன் பொருட்கள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சங்கத்தில் பதிவு பெறாத கட்டுமான தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கி அவர்களின் குடும்பங்களை பாதுகாத்திட முன்வர வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனு அனுப்பி உள்ளோம். அவர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்