சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின; வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் - கடைகள் அடைக்கப்பட்டன

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.

Update: 2020-04-25 23:30 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் நோய் சமூக பரவலாக மாறாமல் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது என்றும் கலெக்டர் ராமன் அறிவித்திருந்தார்.

அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால் காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளில் முடங்கினர்.

முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, பெரமனூர், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி சிலர் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சாலைகளில் வலம் வந்ததை காண முடிந்தது.

அதேசமயம் முழு ஊரடங்கு பற்றி தெரியாத சிலர் வழக்கம்போல் காய்கறிகள் வாங்க சந்தைக்கு வந்தனர். ஆனால் சந்தைகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆவின் பால் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் அதனை பொதுமக்கள் கூடுதலாக வாங்கிச்சென்றதை காண முடிந்தது. சேலம் மாநகரில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவுபடி துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியே வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்ததோடு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்களில் சென்ற சிலரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். முழு ஊரடங்கு உத்தரவால் சேலம் மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. அம்மா உணவகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டதால் அங்கு காலை மற்றும் மதிய வேளையில் ஏராளமானோர் சாப்பிட்டு சென்றனர்.

இதே போல், ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், சங்ககிரி, வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காய்கறி சந்தைகள், உழவர்சந்தைகள், பஸ் நிலையங்கள், சுற்றுலா தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஆத்தூரில் முக்கிய சாலையான ராணிப்பேட்டை, கடைவீதி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

சுற்றுலா நகரமான ஏற்காடு, மேட்டூர் பகுதி இதே காலக்கட்டத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும். ஆனால் தற்போது வெறிச்சோடி காணப்பட்டதால், சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்தனர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்