சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பி ஓட்டம்

சென்னையில் உள்ள ஓமந்தூரார் மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓடி விட்டனர்.

Update: 2020-04-25 22:39 GMT
சென்னை, 

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிந்தாதிரிப்பேட்டை வெல்லர் சாலையை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவருக்கு சளி, இருமல் இருந்ததால், அவர் கொரோனா பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரின் சளி மாதிரிகளை எடுத்து டாக்டர்கள் பரிசோதனைக்கு அனுப்பி, ஆஸ்பத்திரியின் 2-வது கட்டடத்தின் 3-வது மாடியில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த வாலிபர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். அவரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த வாலிபர் சிகிச்சைக்கு பயந்து ஓடி விட்டதாகவும், தற்போது அவரை போலீசார் பிடித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும், மீண்டும் அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் அவருக்கு கொரோனா தொற்று குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் திடீரென ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்.

அந்த முதியவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைக்கு பயந்து அந்த முதியவர் ஓடிவிட்டதாகவும், அவரை தற்போது தேடும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த முதியவர் வெளியே எங்கும் செல்லாமல் மருத்துவமனையின் வளாகத்தில் உள்ளே மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்ததை கண்ட மருத்துவமனை போலீசார், அவரை பிடித்து வார்டில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சென்னையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்