கும்பகோணத்தில் வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று? நிபுணர் குழு ஆய்வு

கும்பகோணத்தில் வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2020-04-25 22:47 GMT
கும்பகோணம், 

கும்பகோணத்தில் வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வன விலங்குகள்

தஞ்சை மாவட்ட வன அலுவலர் குருசாமி, கால்நடைத்துறை உதவி இயக்குனர் சையது அலி, வனவர் சரவணன் உள்ளிட்ட நிபுணர் குழுவினர் கும்பகோணத்தில் தனியாரால் வளர்க்கப்படும் யானை, ஒட்டகம் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வன விலங்குகளை வளர்க்கும் முறை, நோய் தொற்று காலத்தில் விலங்குகளை பராமரிக்கும் முறை, அவற்றை வளர்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து நிபுணர் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாவட்ட வன அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தனியாரால் வளர்க்கப்பட்டு வரும் வன விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கோவில்களில் வளர்க்கப்படும் 3 யானைகள் உள்பட 5 யானைகள், 1 ஒட்டகம் ஆகியவற்றுக்கு சோதனை செய்துள்ளோம். இதில் அனைத்து விலங்குகளும் ஆரோக்கியமாக உள்ளது தெரியவந்தது.

எந்த நோயாக இருந்தாலும் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கோ, விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கோ பரவ கூடாது. இதற்கு முன்கூட்டியே பாதுகாப்பாக இருப்பது குறித்து விலங்குகளை வளர்ப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விலங்குகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது யானை பயிற்சி நிபுணர் அசோக் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்