கூடலூர் அருகே, காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை மருத்துவ குழுவினரை விரட்டியதால் பரபரப்பு

கூடலூர் அருகே காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை, ஆய்வு செய்ய வந்த மருத்துவ குழுவினரை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-26 06:12 GMT
கூடலூர்,

கூடலூர் அருகே சில்வர் கிளவுட், கோக்கால், மேல்கூடலூர், கெவிப்பாரா, கோத்தர்வயல், ஏழுமுறம், தோட்டமூலா உள்ளிட்ட பகுதிகளில் காலில் காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. மேலும் விவசாய பயிர்கள், பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தியது. அந்த காட்டுயானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பழங்கள், பலாக்காய் களுக்கு நடுவில் மாத்திரைகளை மறைத்து வைத்து, காட்டுயானைக்கு வழங்கி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அதன் காயம் குணமாகி வருவதோடு, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் கோவையில் இருந்து வனகால்நடை டாக்டர்கள் மனோகரன், சுகுமாறன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டுயானையின் உடல் நிலையை ஆய்வு செய்ய வந்தனர். பின்னர் ஏழுமுறம் பகுதியில் நின்றிருந்த காட்டுயானையை பார்வையிட்டனர். அவர்களுடன் வனத்துறையினரும் இருந்தனர். தொடர்ந்து பழங்களில் மாத்திரைகளை மறைத்து வைத்து கொடுத்து, சிகிச்சை அளிக்குமாறு வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினர்.அப்போது திடீரென ஆக்ரோஷமான காட்டுயானை, வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரை துரத்தியது. உடனே அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் முதுமலை வனப்பகுதிக்குள் காட்டுயானை சென்றது. இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

காயத்துடன் சுற்றித்திரிந்த அந்த காட்டுயானை, முதுமலை வனப்பகுதியில் இருந்து இரவில் வெளியேறி ஊருக்குள் வந்து விடுகிறது. அதன்பிறகு காலையில் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இவ்வாறாக கடந்த சில மாதங்களாக காயத்துடன் அந்த காட்டுயானை சுற்றித்திரிந்து வந்தது.

அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த காயம் குணமடைந்து வருகிறது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதோடு, ஆரோக்கியமாக காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது வன காப்பாளர்கள் பிரதீப், பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்