உயர் அழுத்த மின்கம்பியில் பழுது: புதுவை நகர பகுதி இருளில் மூழ்கியது - பொது மக்கள் அவதி

புதுவை நகர பகுதியில் திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2020-04-26 06:55 GMT
புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு மின்சாரம் பெறப்படுகிறது. இந்த மின்சாரம் வில்லியனூருக்கு உயர்அழுத்த மின் கம்பிகள் வழியாக எடுத்து வரப்பட்டு அங்கிருந்து நகர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் நகர பகுதிக்கு மின்சாரத்தை பிரித்து அனுப்பும் டிரான்ஸ்பார்மரில் நேற்று இரவு 8.50 மணியளவில் திடீரென தீப்பிடித்து பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக புதுவை நகரப்பகுதியில் மின்சார வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பழுதை சரிசெய்யும் பணியில் மின்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி பழுது சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு 10.30 மணியளவில் மீண்டும் மின்சாரம் தடைபட்டு, சிறிது நேரத்தில் சீரானது.

மின்சாரம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வந்து வீதிகளிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும் மக்கள் நின்று காற்று வாங்கினர். ஏற்கனவே ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்கள், மின்தடையால் மேலும் அவதிப்பட்டனர். இரவு நேரத்தில் துப்புரவு பணிக்கு வந்த பணியாளர்கள் மின்சார தடை காரணமாக சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து இருந்தனர். சீரான மின்வினியோகம் வந்ததும் அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்