கொரோனா தடுப்பு பணிக்கு, 4 லட்சம் முக கவசங்கள், கிருமிநாசினி தெளிப்பு வாகனம் - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக 4 லட்சம் முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Update: 2020-04-26 06:55 GMT
பெரியகுளம்,

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் 4 லட்சம் முக கவசங்களை சுகாதாரத்துறைக்கும், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் தனது சொந்த நிதியில் இருந்து சுகாதார பணிகளுக்காக ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை பெரியகுளம் நகராட்சிக்கும் வழங்கும் நிகழ்ச்சி, பெரியகுளத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். ரவீந்திரநாத்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். அப்போது, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முக கவசங்கள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தி அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளியை பொதுமக்கள் சரிவர கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, சப்-கலெக்டர் சினேகா, சிறப்பு வருவாய் அலுவலர் தியாகராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகர்நல அலுவலர் தினேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் அசன்முகமது, அலெக்சாண்டர், தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை கவுரவ ஆலோசகர் சரவணன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

மேலும் செய்திகள்