பரங்கிமலையில் கொரோனா தொற்று பகுதியில் தடுப்பு வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பரங்கிமலையில் கொரோனா தொற்று பகுதியில் தடுப்பு வேலி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2020-04-26 22:30 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பரங்கிமலை கண்டோன்மெண்ட் பகுதி நசரத்புரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் அந்த பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் அந்த பகுதியில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுகாதார துறையினர் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையறிந்து வந்த பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாங்கள் பொது கழிப்பிடம் செல்ல வேண்டி இருப்பதால், அதற்கு வழி செய்து விட்டு, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து மாற்று ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்து விட்டு திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்