திருவள்ளூர், காஞ்சீபுரம் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு மருத்துவ வல்லுனர் குழு பேட்டி

கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என்றும் மருத்துவ வல்லுனர் குழு தெரிவித்துள்ளனர்.

Update: 2020-05-30 23:14 GMT
காஞ்சீபுரம்,

தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடையும் நிலையில், தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், பொது போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு உத்தரவு குறித்த ஆலோசனைகளை 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர்கள் குழு சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரப்தீப் கவுர், சிம்ஸ் மருத்துவமனை தொற்று நோய் நிபுணர் டாக்டர் பி.குகநாதன், அப்பல்லோ மருத்துவமனை தொற்று நோய் நிபுணர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட டாக்டர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரப்தீப் கவுர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவில் அதிக அளவு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். எனவே கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். எல்லா தளர்வுகளும் வழங்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டுப்பாடு இல்லாமல் மாவட்ட வாரியாக அதன் தன்மை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.

டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாளும் திறன் கிடைத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவரின் கடமையும் அவசியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் வெளியில் சென்று வேலைக்கு செல்லக்கூடாது. இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம். உடல்நிலை சரியில்லாத போது சீக்கிரம் டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் பி.குகநாதன் கூறியதாவது:- கொரோனா குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊடகங்கள் பெரிய அளவில் ஏற்படுத்தி உள்ளது. அதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்தியாகிவிட்டது. சென்னையில் மட்டும் அதிகமாக காணப்படுவதற்கு காரணம் மக்கள் அடர்த்தி. குறிப்பாக மண்டலம் 4, 5, 6-ல் அதிகரிக்க காரணம் குடிசை மாற்றுவாரிய பகுதிகள் அதிகமாக உள்ளது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஏற்கனவே கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளாக பஸ் விட வேண்டும், மெட்ரோ ரெயில் சேவை தொடங்க வேண்டும், கல்யாண மண்டபத்தை திறக்க வேண்டும், வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால், சென்னை நகரத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இவற்றை தளர்த்தினால் மனித உயிர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, இவற்றை மெதுவாக தளர்த்தலாம்.

சென்னையில் சமூக பரவல் ஆகவில்லை. அவ்வாறு ஆகியிருந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். வெளிநாடுகளையும், மற்ற இடங்களை ஒப்பிடும் போது இங்கு இறப்பு விகிதம் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்