மதுரைக்கு விமானத்தில் வந்தவர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா

டெல்லி, சண்டிகரில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த 2 வாலிபர்கள் உள்பட 19 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-05-31 02:08 GMT
மதுரை, 

டெல்லி, சண்டிகரில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த 2 வாலிபர்கள் உள்பட 19 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ்

மதுரையில் நேற்று 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர், டெல்லி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வழியாக மதுரைக்கு விமானங்களில் வந்தவர்கள். சமீபத்தில் மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அறிகுறிகள் இருந்தவர்கள் மட்டும் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் மதுரை மேலவளவு பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மற்றும் சிலைமான் அருகே உள்ள புலியூர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் டெல்லி மற்றும் சண்டிகர் பகுதிகளில் இருந்து மதுரை வந்தவர்கள். இவர்களுடன் பயணித்த நபர்கள் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மற்றொருவர் மதுரை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த 77 வயது முதியவர். இவருக்கு இருதய தொடர்பான பிரச்சினைகள் இருந்ததால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள செக்கடி தெரு பகுதியை சேர்ந்த 32 வயது பெண், 63 வயது மூதாட்டி, 43 வயது ஆண்.

சுகாதார ஊழியர்

இதுபோல் மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர், அனுப்பானடி பகுதியை சேர்ந்த 44 வயது நபர், தபால்தந்தி நகர் பகுதியை சேர்ந்த 39 வயது நபர், வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், மேலூர் பகுதியை சேர்ந்த 44 வயது வாலிபர், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, தொட்டப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், மாத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது பெண், உசிலம்பட்டி அருகே உள்ள குன்னத்துபட்டி பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், கருங்காலக்குடி பகுதியை சேர்ந்த 38 வயது வாலிபர் மற்றும் 3 வயது குழந்தை உள்பட 19 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 7 பேர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் மதுரை வந்தவர்கள். 3 பேர் சென்னையில் இருந்து மதுரை வந்தவர்கள். ஒருவர் சுகாதார ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து கொரோனா பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருமி நாசினி

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த 5 பேர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் மதுரை மேலூர், மலம்பட்டி, தத்தனேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்