ஒரே நாளில் ஜிப்மர் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா ; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆனது

ஒரே நாளில் நேற்று ஜிப்மர் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-06-01 01:12 GMT
புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் ஏற்கனவே 37 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மேலும் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர், சோலை நகரில் 2 பேர், அன்னை தெரசா நகர், திலகர் நகர், கொம்பாக்கம், பெரிய கோட்டகுப்பம், வடமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என 9 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 36 பேர், ஜிப்மரில் 9 பேர், சேலத்தில் பெண்மணி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மற்றவர்கள் 15 முதல் 25 வயது நிரம்பியவர்கள் ஆவார்கள். கொம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். பெரிய கோட்டகுப்பத்தில் பாதிக்கப்பட்டவர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆவார்.

புதுச்சேரியில் 13 இடங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசே எல்லைகளை வரையறுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளதையடுத்து முதல் அமைச்சர் தெரிவித்த முடிவுகளின்படி அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜூன் 30-ந்தேதி வரை எந்த தளர்வுகளும் அளிக்கப்படாது. மற்ற பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட உள்ளன. நேற்று மட்டும் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து புதுச்சேரியில் மொத்தம் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்