கடலூர் : ஊரடங்கு தளர்வு; பஸ் போக்குவரத்து தொடங்கியது

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதில் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2020-06-02 05:48 GMT
கடலூர்,

கொரோனா நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் கடந்த 2 மாத காலமாக பஸ், ரெயில் உள்ளிட்ட பல்வேறு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பிழைப்பு தேடி வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், சென்றவர்கள் என அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே ஊரடங்கு காலத்தை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில், குறிப்பாக போக்குவரத்தில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் போக்குவரத்துக்கு வசதியாக 8 மண்டலங்களாக பிரித்து, அதில் இ-பாஸ் இன்றி 50 சதவீத பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

இதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் 3-வது மண்டலத்தில் வருகிறது. இந்த மண்டலத்திற்குள் 50 சதவீத பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கும், கடலூர் மாவட்டத்திற்குள்ளும் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வருகையை பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணித்தனர்.

குறிப்பாக காலை 7 மணிக்கு அரசு ஊழியர்கள் தான் அதிக அளவில் பஸ்களில் பயணித்ததை காண முடிந்தது. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர். அதேபோல் பயணிகளுக்கு அவர்களின் வெப்ப நிலையை கண்டறிந்த பிறகே பஸ்களில் ஏற கண்டக்டர்கள் அனுமதித்தனர்.

அதேபோல் டிரைவர்கள், கண்டக்டர்களும் கையுறை, முக கவசம் அணிந்திருந்தனர். பயணிகளுக்காக சானிடைசரும் வைக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.

கடலூரில் இருந்து பெரும்பாலான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பஸ்களை பொறுத்தவரை கும்பகோணம் மார்க்கத்தில் கொள்ளிடம் வரையிலும், திருச்சி வழித்தடத்தில் தொழுதூர், வீ.கூட்டுரோடு வரையிலும், காட்டுமன்னார்கோவில் மார்க்கத்தில் மீன் சுருட்டி வரையிலும், சென்னை வழித்தடத்தில் திண்டிவனம் வரையிலும், புதுச்சேரி மார்க்கத்தில் கன்னிக்கோவில் வரையிலும் பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் யாரும் நேற்று வரவில்லை. இதனால் பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதுதவிர திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால், கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் பூஜை செய்து வழிபட்டு, அதன் பிறகு பஸ்களை இயக்கி சென்றனர்.

இது பற்றி அரசு போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு அறிவித்தபடி கடலூர் மாவட்டத்தில் 241 டவுன் பஸ்களில் 140 பஸ்களும், 300 புறநகர் பஸ்களில் 150 பஸ்களையும் இயக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பஸ் நிலையங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்திருந்தனர். இதனால் தேவைக்கேற்ப பஸ்களை இயக்கினோம். குறிப்பாக கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள அனைத்து வழித்தடத்திலும் பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பஸ்களை இயக்கினோம் என்றார்.

மேலும் செய்திகள்