சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதால் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-06-03 00:41 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே புதியதாக மீன் பிடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் 144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடை காலங்களால் அவதிப்பட்டு வரும் மீனவ மக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

காசிமேடு பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பை கையாள வேண்டும். அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணியவேண்டும். மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றவாறு மக்கள் தொகை அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தளர்வுகள் இல்லை என்றால் மக்கள் பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் குறிப்பிட்ட இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1 கோடிக்கும் மேல் மக்கள் தொகை இருப்பதால் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிரமம் என்பதால் மேலும் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்