முதியவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா ; 3 பேர் வீடு திரும்பினர்

புதுச்சேரியில் 2 முதியவர் உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-06-04 00:42 GMT
புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் ஏற்கனவே 53 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது மேலும் 7 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆனது.

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 80 வயது முதியவர், 75 வயது மூதாட்டி ஆகியோரும் அடங்குவர். 3 பேர் ஜிப்மரில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்தவர்கள். புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் தர்மாபுரி, மேட்டுப்பாளையம், நெட்டப்பாக்கம், முத்தியால்பேட்டை, கதிர்காமம், தவளக்குப்பம், முருங்கப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

புதுவையில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 90 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 57 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்