அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2,633 பயனாளிகளுக்கு மானியம் வழங்க அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2,633 பயனாளிகளுக்கு மானியம் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-06-04 02:04 GMT
கிருஷ்ணகிரி,

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் பெண்கள் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

அதன்படி, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையோர் என விரிவுப்படுத்தி திருத்திய உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கு 2,704 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை பெற்றுள்ள பயனாளிகள் உடனடியாக இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கான மானிய கருத்துருக்களை வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் சமர்ப்பித்து மானியம் பெற்று கொள்ளலாம்.

மேலும், 2020-21-ம் ஆண்டிற்கு 2,633 பயனாளிகளுக்கு மானியம் வழங்க உத்தேச அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்