விருதுநகர் நகராட்சி மைதான காய்கறி மார்க்கெட்டில் தனியார் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை கமிஷனர் பார்த்தசாரதி தகவல்

விருதுநகர் அல்லம்பட்டி முக்குரோடு அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டில் தனியார் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை என்றும், நகராட்சி நிர்வாகமே கட்டணம் வசூலிக்கும் என்றும் கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்தார்.

Update: 2020-06-08 03:09 GMT
விருதுநகர், 

விருதுநகர் நகராட்சி மைதானத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தனிநபர் ஒருவர் காய்கறி கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பதோடு மாதம் ரூ.2500 முதல் ரூ.5000 வரை வசூலிப்பதாகவும் புகார் செய்தனர். இதைதொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

அனுமதி இல்லை

இந்தநிலையில் இப்பிரச்சினை குறித்து விசாரித்த கமிஷனர் பார்த்தசாரதி தெரிவித்ததாவது:-

விருதுநகர் நகராட்சி மைதானத்தில் கடைகள் அமைக்க ஏற்கனவே டெண்டர் விடப்பட்டது. 13 கடைகள் தலா ரூ.2 லட்சம் வீதம் டெண்டர்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பால் ஏலம் நடத்த முடியவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு 70 பேர் வரை அங்கு காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். முதலில் அங்கு வர மறுத்த காய்கறி வியாபாரிகள் தற்போது அந்த காய்கறி சந்தை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனவே அந்த காய்கறி மார்க்கெட்டில் தனிநபர் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை.

ஏற்பாடு

நகராட்சி நிர்வாகமே இனி வரும் காலங்களில் கடைகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கும். வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தரமாக காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து உரிய பரிசீலனைக்கு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்குள்ள காய்கறி வியாபாரிகள் காய்கறி மார்க்கெட் தொடர்ந்து செயல்பட நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்