கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை : புதிய டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை; சுகாதாரத்துறை செயலாளர் வழங்கினார்

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிக்காக 6 மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Update: 2020-06-11 02:08 GMT

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிக்காக 6 மாதம் ஒப்பந்தம் அடிப்படையில் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த 574 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்த மாணவர்கள் என இதுவரை 1,563 டாக்டர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளில் உள்ள படுக்கை வசதிகள் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பொது சுகாதாரத்துறை டாக்டர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் எண்ணிக்கையில் அரசு வெளிப்படையாக ஒவ்வொரு நாளும் தகவல்களை வெளியிட்டு வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்