நிதி நிறுவனங்கள் தவணை தொகையை வசூலிப்பதாக புகார்: சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

குடவாசல் பகுதிளில் நிதி நிறுவனங்கள் தவணை தொகையை வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

Update: 2020-06-16 00:47 GMT
குடவாசல்,

குடவாசல் தாலுகாவில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் கடந்த ஜூன் முதல் வாரத்தில் இருந்து தவணை தொகையை வசூலிக்கும் செயலில் இறங்கி உள்ளன. இதனை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சேகர், தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்தார்.

இதையடுத்து நேற்று குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா மற்றும் நிர்வாகிகள், அரசு தரப்பில் குடவாசல் தாசில்தார் பரஞ்சோதி, மண்டல தாசில்தார் தேவேந்திரன், குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், நிதி நிறுவனங்கள் சார்பாக குடவாசல் வட்டத்தில் செயல்படும் 7 மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர்

தவணை தொகை

கொரோனா பாதிப்பு காலத்தில் எந்தவிதமான நிதி நிறுவனங்களும் ஆகஸ்டு மாதம் வரை கடன் தவணை தொகையை வசூல் செய்ய கூடாது என உத்தரவு உள்ளது. இதனை மீறி மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் ஜூன் முதல் வாரத்தில் இருந்து தவணை தொகையை வசூல் செய்து வருகிறது. இதனால் ஏழை எளிய விவசாய தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பட்ட மக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் கிடைக்கும் வேலையை செய்து வயிற்று பசியை போக்கும் நிலையில் உள்ள மக்களிடம் சென்று தவணை தொகையை வசூல் செய்வது ஏற்புடையது அல்ல. ஆகவே அரசு உத்தரவுப்படி ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு தவணை தொகையை வசூல் செய்ய வேண்டும் என குடவாசல் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சேகர் பேசினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தாசில்தார் பரஞ்சோதி நாளை (புதன்கிழமை) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சமாதான கூட்டத்தை ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்