பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தஞ்சம் அடைந்தார்.

Update: 2020-06-18 00:22 GMT
கரூர்,

கரூர் மாவட்டம் பரமத்திக்குட்பட்ட ஆத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் பிரவினா (21). இவர் தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் பகுதியை சேர்ந்த தனது பெற்றோருடன் வசித்து வந்து, பி.காம். வரை படித்து உள்ளேன். இந்நிலையில் நானும், ஆத்துமேட்டு தெருவை சேர்ந்த சஞ்சய் (21) என்பவரும், கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் என்னை வீட்டு காவலில் அடைத்து வைத்து, எனது விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க எற்பாடு செய்தனர். இதனால் கடந்த 11-ந்தேதி வீட்டை விட்டு தப்பித்து வந்து, தாந்தோணிமலை காளியம்மன் கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டு, ஆத்துமேட்டு தெருவில் உள்ள எனது கணவர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தோம்.

அலுவலகத்தில் பெண் தஞ்சம்

இந்நிலையில் கடந்த 13-ந்தேதி எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் கணவரின் வீட்டிற்கு வந்து, அவரை கொலை செய்ய முயன்று, என்னை அழைத்து செல்ல முயன்றனர். இதனால் நாங்கள் அங்கிருந்து தப்பித்து வந்தோம். ஆனால் எனது கணவரின் உறவினர்களை மிரட்டியும், கணவரின் செல்போனுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எங்களின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், எனது கணவரை ஆணவக்கொலை செய்ய முயலும் எனது பெற்றோர் மற்றும் அவரை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்