நாடே பிரதமருக்கு ஆதரவாக நிற்கிறது சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்

நாடே பிரதமருக்கு ஆதரவாக நிற்கிறது. சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-06-17 22:30 GMT
மும்பை, 

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதுதொடர்பாக சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நீங்கள் தைரியமானவர். ஒரு போர் வீரர். உங்கள் தலைமையின் கீழ் சீனாவுக்கு எதிராக இந்தியா பழிவாங்கும். சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எப்போது சரியான பதிலடி கொடுக்கப்படும்?

ஒரு புல்லட் கூட சுடப்படாமல் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். நாம் என்ன செய்தோம்? எத்தனை சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்? தற்போதைய சூழ்நிலையில் நாடு பிரதமருடன் உள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஏதாவது பேசுங்கள். நாடு உண்மையை அறிய விரும்புகிறது. ஜெய்ஹிந்த். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மராட்டிய துணை முதல்-மந்திரி அஜத்பவார் அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் பேணுவதில் அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்