சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: 2 பேர் அதிரடி கைது

சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை கண்டித்து வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-12-20 05:41 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பாகு மகன் சுந்தர்(42), நாசரேத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்(24). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் தட்சமொழி முதலூர் சாலையில் செயல்படும் மதுபான கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுடலைமுத்துவின் ஊரைச்சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவில் சுந்தர் பணிபுரியும் மதுபான கூடத்துக்கு சென்று மது அருந்தினர். அப்போது அவர்களுக்கும் சுந்தர் மற்றும் ஜெகதீசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் சுடலைமுத்து நேற்று காலை காந்திநகர் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது சுந்தர், ஜெகதீஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் சுடலைமுத்து அருகே சென்று சாதி பெயரை கூறி கடுமையாக வசைபாடினர். இதனை சுடலைமுத்து கண்டித்தார்.

அப்போது கைகலப்பு உருவாக இருந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் ஜெகதீஷ், சுந்தரை தடுத்து நிறுத்தி இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சுடலைமுத்துவிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சுந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுடலைமுத்துவை சரமாரி வெட்டினார். படுகாயமடைந்த அவர் அலறினார். அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த உறவினர்கள் ஓடிவந்து தடுக்க முயன்றனர். ஆனால் உறவினர்களை கீழே தள்ளிவிட்டு சுடலைமுத்துவை மீண்டும் வெட்ட முயன்றனர்.

உயிருக்கு பயந்து சுடலைமுத்து அங்கிருந்து ஓடினார். ஆனால் இருவரும் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று சரமாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைக்கண்ட உறவினர்கள் அங்கு கூடினர். அவர்களை சுந்தரும், ஜெகதீசும் மிரட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சாத்தான்குளம் டி.எஸ்.பி. (பொறுப்பு) ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது கொலையாளிகளை பிடிக்காமல் அவரது உடலை எடுக்கக் கூடாது என சுடலைமுத்துவின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அங்குள்ள சாலையில் அமர்ந்துகொண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் வேலம்மாள், நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசாரும் அங்கு வந்தனர்.

சுடலைமுத்துவின் உடலை கொண்டு செல்ல உறவினர்கள் சம்மதித்த நிலையில், போலீசார் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை. எனவே சுடலைமுத்துவின் உடல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரின் மனைவி ராமலட்சுமி சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்தார்.

பதற்றத்தை தவிர்ப்பதற்காக சாத்தான்குளம் பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுந்தர் மற்றும் ஜெகதீசை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், அவர்கள் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து அங்கு உடனே சென்ற போலீசார், சுந்தர், ஜெகதீசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்