கொரோனா வேகமாக பரவி வருகிறது: பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வேண்டுகோள்

புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-06-17 22:15 GMT
புதுச்சேரி, 

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்களால் தான் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வு இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் 40, 50 பேரை சந்திக்கின்றனர். விசாரணையின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சரிவர சொல்வதில்லை. இதனால் சிலர் கொரோனா பரிசோதனையில் இருந்து விடுபட்டு விடுகின்றனர். இதன் காரணமாகவும் பலருக்கு கொரோனா பரவுகிறது.

கடந்த 10 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துவிட்டது. முதன் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மக்கள் அரசின் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்தார்கள். அதனால் ஓரிரு நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தற்போது மக்கள் ஊரடங்கைப்பற்றி கவலைப்படாமல் மெத்தனமாக உள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் கடந்த 15 நாட்களாக சென்னைக்கு சென்று வந்துள்ளனர். இதேபோல் சென்னையில் இருந்தும் பலர் புதுவைக்கு திரும்பியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. எனவே சென்னையில் இருப்பவர்கள் உடனடியாக புதுச்சேரி திரும்ப வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்கும் வகையில் எல்லைகளை மூடியுள்ளோம்.

பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக தேவையான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கொரோனா ஒருவரை பாதித்தால் அவரது குடும்பத்தினர், பழகியவர்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்கிறது. புதுச்சேரியில் 13 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். அதுபோல் புதுச்சேரியில் 73, காரைக்காலில் 3, மாகியில் 3 என மொத்தம் 79 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்