வெறையூர் அருகே எல்லை பிரச்சினையால் 3 நாட்களாக வனப்பகுதியில் கிடக்கும் வாலிபர் பிணம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வெறையூர் அருகே எல்லை பிரச்சினையால் 3 நாட்களாக வனப்பகுதியில் கிடக்கும் வாலிபரின் உடலை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-06-29 20:58 GMT
வாணாபுரம்,

வெறையூர் அருகே உள்ள பொறிகல் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை பார்த்துவிட்டு இந்த பகுதி எங்கள் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அதனால் இதனை நாங்கள் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும் வனப்பகுதி அருகில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலைய எல்லையான மணலூர்பேட்டை இருப்பதால் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த போது அவர்களும் இது எங்கள் போலீஸ் நிலைய எல்லை பகுதி இல்லை என்றும் தெரிவித்து விட்டனர்.

பிணம் கிடக்கும் இடம் யாருடையது என்று சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் வரைபடத்தை வைத்து பார்த்ததில் அது மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்று தெரியவந்தது. ஆனால் மணலூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அது எங்களுடைய எல்லைப்பகுதி கிடையாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த எல்லை பிரச்சினையால் 3 நாட்களுக்கு மேலாகியும் உடல் அப்புறப்படுத்தவில்லை. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 2 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை மேற்கொண்டு வனப்பகுதியில் கிடக்கும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்