தனியார் பள்ளி கட்டணத்தில் மாநில அரசு தலையிட முடியாது - மும்பை ஐகோர்ட்டு அதிரடி

தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வதில் மாநில அரசு தலையிட முடியாது என மும்பை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2020-06-30 21:59 GMT
மும்பை,

கொரோனாவால் மராட்டியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றுநோயை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டிற்கான (2020-21) கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என மராட்டிய அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.

ஆனால் இதை எதிர்த்து இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் வாரியம் (ஐ.சி.எஸ்.இ.), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மற்றும் சர்வதேச கல்வி வாரியம் என அரசின் கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் உதவி பெறாத மற்றும் தனியார் உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளின் கல்வி அறக்கட்டளைகள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் ரியாஸ் சக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது, தனியார் உதவி பெறாத பள்ளிகள் மற்றும் பிற வாரியங்களின் பள்ளிகளின் கட்டண கட்டமைப்பில் தலையிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:- மராட்டிய கல்வி நிறுவனங்கள் (கட்டண ஒழுங்குமுறை) சட்டத்தின்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கட்டணத்தில் தலையிடவே அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. தனியார் உதவி பெறாத மற்றும் நிரந்தரமாக உதவி பெறாத பள்ளிகளின் நிர்வாகம் தங்கள் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்கும் தகுதி பெற்றுள்ளன என்று அந்த சட்டத்தின் 6-வது பிரிவு தெளிவுபடுத்துகிறது.

தனியார் உதவி பெறாத பள்ளிகளில் கட்டண நிர்ணயம் தொடர்பாக அரசாணை வெளியிடுவதற்கு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கூட மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

இருப்பினும் நெருக்கடியான நேரத்தில் மாணவர்களின் பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களை கோர்ட்டு நினைவில் கொண்டிருக்கிறது. எனவே தனியார் உதவி பெறாத பள்ளிகளின் நிர்வாகம் மாணவர்கள், பெற்றோரிடம் நியாயமான முறையில் தவணைகளில் கட்டணத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதையும், ஆன்லைனில் கட்டணத்தை செலுத்துவதற்கு அனுமதிப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

பின்னர் அந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்