கடன் கொடுத்த பணம் திரும்பி வராததால் விரக்தி: பெண் போலீஸ் விஷம் தின்று தற்கொலை

கடன் கொடுத்த பணம் திரும்பி வராததால் விரக்தி அடைந்த பெண் போலீஸ், விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-07-01 00:49 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 34). இவர் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை பெண் போலீசாக பணியாற்றி வந்தார். திருமணமான ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, பவானி தனது கணவரை பிரிந்து, தனது மகளுடன் சகோதரி ஆனந்தி வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு பவானி திருச்சியில் பணியாற்றியபோது, தன்னுடன் பணியாற்றிய 2 பெண் போலீசாரிடம் சுமார் ரூ.4 லட்சம் வரை கடன் கொடுத்ததாக தெரிகிறது. பலமுறை கேட்டும், அவர்கள் பவானிக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பவானி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி காலை வழக்கம்போல் பவானி பணிக்கு சென்றார். அப்போது, அவருக்கு ஒரு வழக்கு தொடர்பாக கோவையில் உள்ள மருத்துவமனையில் இருந்து காயச்சான்று பெற்றுவரும் பணி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், தனது ஸ்கூட்டரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தான் பணியாற்றும் வையம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீரனூர் பிரிவு அருகே சென்றதும், மனவிரக்தியில் இருந்த அவர், தற்கொலை செய்வதற்காக எலிபசையை (விஷம்) தின்றுள்ளார். பின்னர், அங்கிருந்து கோவைக்கு சென்று சம்பந்தப்பட்ட மருத்துவமனையில், அவர் காயச்சான்று வாங்கிக்கொண்டு மீண்டும் வையம்பட்டிக்கு புறப்பட்டார்.

எலிபசையை தின்றதாலும், மனவிரக்தியில் இருந்ததாலும் அவர் வழிதவறி திருச்செங்கோடுக்கு சென்றுவிட்டார். திருச்செங்கோட்டில் அவருக்கு மிகவும் முடியாமல் போகவே, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, நடந்த விவரங்களை கூறி சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளார். மேலும், அவருக்கு உதவியாக திருச்செங்கோட்டில் பணியாற்றும் தனது தோழியை மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தினர், பவானி தற்கொலைக்கு முயன்ற விவரத்தை வையம்பட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து பவானியின் சகோதரி ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில், வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயச்சான்று வாங்குவதற்காக வையம்பட்டியில் இருந்துசுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவைக்கு தனி ஆளாக ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் பவானி, அங்கு காயச்சான்று வாங்கி தனது பையில் வைத்துக்கொண்டு வந்துள்ளார். தற்கொலை செய்யும் நோக்கில், காலையிலேயே எலிபசையை தின்றாலும், அவர் தனது பணியை நிறைவு செய்துவிட்டு தான் உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீஸ் பவானி எலிபசையை தின்பதற்கு முன்பு, சென்னையில் உள்ள தனது தோழியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தன்னிடம் பணம் வாங்கிய சக பெண் போலீசார் 2 பேர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்துவதாகவும், தற்போது, தனக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் மிகுந்த வருத்தத்துடன் கூறி விட்டு, இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பவானியின் தோழி, உடனே இதுபற்றி அவருடைய சகோதரி ஆனந்திக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் செல்போனில் பவானியை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் வேலையை முடித்துக்கொண்டு மாலையில் வந்து விடுவேன். தற்கொலை எல்லாம் செய்ய மாட்டேன். பயப்படாதே என்று கூறியுள்ளார். இருப்பினும் மனம் கேட்காமல் மதியமும் பவானிக்கு போன் செய்து ஆனந்தி கேட்டபோது, கோவையில் இருந்து புறப்பட்டு விட்டேன். சீக்கிரம் வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்