திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆதரவு இல்லத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆதரவு இல்லத்தில் 14 வயது சிறுவன், 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-01 23:59 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கொசவன்பேட்டை ஊராட்சி, ராள்ளப்பாடி கிராமத்தில் உள்ள தனியார் ஆதரவு இல்லத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 பேர் தங்கி உள்ளனர். இந்த ஆதரவு இல்லத்தின் உரிமையாளருக்கு கொரோனா உறுதியானதால் அதே இல்லத்தின் ஒரு பகுதியில் தனது மனைவியுடன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அதன் பிறகு அந்த இல்லத்தில் தங்கியிருந்த 72 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பலியானார்.

இதையடுத்து அந்த ஆதரவு இல்லத்தில் தங்கி இருந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 வயது சிறுவன், 41 வயது மற்றும் 54 வயது 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

பள்ளிப்பட்டு பேரி தெருவில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வரும் டாக்டர், அவருடைய தாயார், மெயின் ரோட்டில் மருந்துகடை நடத்தி வரும் அவரது அண்ணன் என ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 2,504 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 74 பேர் இறந்து உள்ளனர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நேரு தெருவை சேர்ந்த 30 வயது வாலிபர், சாய் பாபா கோவில் தெருவைச் சேர்ந்த 20 வயதான 2 வாலிபர்கள், பாரதியார் தெருவை சேர்ந்த 35 வயது பெண், 40 வயது ஆண், கொளப்பாக்கம் டி.வி.எஸ். எமரால்டு குடியிருப்பு பகுதியை சேர்ந்த 36 வயது பெண், ஆலப்பாக்கம் புத்தூர் ரோடு எஸ்.எஸ்.எம் குடியிருப்பில் வசிக்கும் 92 வயது பெண், நந்திவரம் என்.எஸ்.கே. தெருவை சேர்ந்த 24 வயது இளம்பெண், கூடுவாஞ்சேரியை சேர்ந்த 53 வயது ஆண் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,648 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 82 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள கீழ்படப்பை துலுக்காத்தம்மன் தெருவைச் சேர்ந்த 32 ஆண் மற்றும் மணிமங்கலம் ஊராட்சி திரு.வி.க. தெருவைச் சேர்ந்த 56 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,067 ஆனது. இவர்களில் 844 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 1,200 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் பலியானார்கள்.

மேலும் செய்திகள்