கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா? மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதில்

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.

Update: 2020-07-02 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.

மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மீண்டும் ஆட்சிக்கு வராது

மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பெரிய தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைமை பதவியை அலங்கரித்தனர். அப்போது காங்கிரசின் நிலை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அக்கட்சியின் தலைவராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றுள்ளார். இதனால் பா.ஜனதாவுக்கு லாபம் தான். எந்த இழப்பும் இல்லை.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராது. ஆயினும் டி.கே.சிவக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அத்தகைய மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். கொரோனா பரவலை தடுக்க மருத்துவ நிபுணர்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர். அதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா நின்றுவிடாது

கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நிபுணர்கள் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. ஊரடங்கை செயல்படுத்தினால் கொரோனா பரவல் நின்றுவிடாது. கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதன் மூலம் கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியல் செய்யாமல், அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதைவிடுத்து தயிரில் கல் தேடுவது சரியல்ல.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்