தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-02 23:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் வினியோகம் இல்லை

விருத்தாசலம் நகரில் உள்ள அப்துல்கலாம் ஆசாத் வீதி, புதுப்பேட்டை, பங்களா வீதி உள்ளிட்ட 3 தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலி குடங்களுடன் அதே பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட பெண்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கடும் துர்நாற்றம்

இதேபோல் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள், இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த குடிநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.

பரபரப்பு

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அவர்கள், சப்-கலெக்டர் பிரவீன்குமாரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரவீன்குமார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்