சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் - மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் தினந்தோறும் 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

Update: 2020-07-02 23:47 GMT
சென்னை,

சென்னை தேனாம்பேட்டை மண்டலம் சுப்புராயன் நகரில் நடைபெற்ற காய்ச்சல் முகாம் மற்றும் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தினசரி 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தினந்தோறும் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

பொதுமக்கள் முககவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி பின்பற்றி மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சென்னையில் இந்த 2 வார ஊரடங்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. தற்போதைய முழு ஊரடங்கில் கூடுதலாக 1.5 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலத்தை பொறுத்தவரை தற்போது மாநகராட்சிக்கு கூடுதல் சவால் ஆகும். மழை ஆரம்பித்தால் ஊழியர்கள் விரைவில் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்படும். மேலும் ‘டெங்கு’ உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிக்கும். எனவே இதனை எதிர்கொள்ளவும் மாநகராட்சி தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்