தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 817 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 817 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-07-03 00:21 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

அதன்படி, அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தேனி ஆயுதப்படை பிரிவு பெண் போலீஸ், தேனி கோட்டைக்களத்தை சேர்ந்த போலீஸ்காரர், மிராண்டா லைன் பகுதியை சேர்ந்த தம்பதி உள்பட தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 10 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ராணுவ வீரர்

சின்னமனூரில் கருங் கட்டான்குளம் பகுதிக்கான தலையாரி உள்பட 2 பேருக்கும், கம்பத்தில் பெண் உள்பட 8 பேருக்கும், ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியில் 2 வயது ஆண் குழந்தை, 75 வயது முதியவர் உள்பட 6 பேருக்கும், டி.சுப்புலாபுரத்தில் தாய், 2 மகன்கள் உள்பட 5 பேருக்கும், செட்டியார்பட்டி, சிந்துவார்பட்டியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தில் 5 வயது சிறுவன், அவனுடைய தந்தை உள்பட 3 பேருக்கும், பழனிசெட்டிபட்டியில் தாய், மகன் உள்பட 8 பேருக்கும், மயிலாடும்பாறையில் தனியார் பஸ் கண்டக்டருக்கும், ஜெயமங்கலத்தில் 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேருக்கும், வடகரையில் 24 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதுபோல், போடியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர், ஜம்மு- காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போது ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் நடத்திய பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

817 ஆக அதிகரிப்பு

வடுகபட்டியில் போலீஸ் ஏட்டுவின் மனைவி, 2 மகன்கள் உள்பட 6 பேர், ராயப்பன்பட்டியில் 30 வயது பெண் ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 817 ஆக அதிகரித்து உள்ளது. இதில், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 194 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 617 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு பழைய மருத்துவமனை, கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், போடி அரசு பொறியியல் கல்லூரி, வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களிலும், மதுரை தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்