மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை மாவட்ட கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-07-03 02:03 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் நிவாரண தொகையை அவர்களின் வீட்டிலே சென்று வழங்கும் வகையில் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 31ஆயிரத்து 356 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.3 கோடியே 13 லட்சத்து 56 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண உதவித்தொகை இன்று (வெள்ளிக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பயனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கப்படும். அவ்வாறு நிவாரண தொகை வழங்க வருபவர்களிடம் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும். மேலும் நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உதவி மறுக்கப்பட்டாலோ அல்லது கிடைக்கப் பெறவில்லையென்றால் மாநில மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 18004250111-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் வாய்பேச இயலாத மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனுடைய நபர்கள் வாட்ஸ் -அப் அல்லது வீடியோ காலில் 97007-99993 எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்